Monday, 21 March 2016

சித்த மருத்துவம்

சித்த மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள்இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர்.[மேற்கோள் தேவை]சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.
சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும்.[மேற்கோள் தேவை] சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்களுக்கான சான்றுள்ளன.
சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை
குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள்
செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர்
இவர்களே வைத்தியராவர்.....
(-- சித்தர் நாடி நூல் 18 --)
சித்தர்கள் மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பன்னிரண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது. நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன.
நம் உடலில் காற்றுவெப்பம்நீர் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.

வாதம் சம்பந்த பிணிகள்

[வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்கள் உள. நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும். கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

பித்தம் சம்பந்த பிணிகள்

பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்கள் உள. செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

சிலேத்துமம் சம்பந்த பிணிகள்

சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானவை. அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடிமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
நோய்களைத் தவிர்க்கும் முறை பற்றி திருக்குறள் கூறுவது,
'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்'
(நோய் விளைவிக்காதவை என்று கூறப்பட்டவைகளை மட்டும் உண்டு வந்தால் மருந்து என்று எதுவும் தேவையில்லை.)

மருந்து

சித்த மருத்துவத்தில் உள் மருந்து 32, வெளி மருந்து 32 என 64 வகை மருத்து வடிவங்கள்(forms of medicine) உள்ளன.
மறுப்ப துடல்நோய் மருந்தென லாகும்
மறுப்ப துளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்ப தினிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே
(-- திருமூலர் திருமந்திரம் --)
திருமூல சித்தரின் கூற்றுப்படி மருந்து என்பது உடல், உள்ளத்தின் நோய்களை போக்குவதுடன், நோய்களை வராமல் தடுப்பதும மற்றும் சாவையும் வர ஒட்டாமல் தடுப்பதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மருந்துகளை சித்த மருத்துவத்தில் பரவலாகக் காணலாம்.

பரிசோதனை

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும். உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு. காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் அதிகரித்து உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது.

அறிவியல் முறையாக்கமும், சீர்தரப்படுத்தலும்

சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துரைகளையும் அறிவியல் முறையில் கிளினிக்கல் சோதனைக்கு (clinical trials) உட்படுத்தி சீர்படுத்தும் பணியில் சித்த மருத்துவ ஆய்வுக்கான நடுவண் அரசு நடுவம் ஈட்பட்டுள்ளது.நீரழிவு நோய்க்கான D 5 choornam மற்றும் Psoriasis நோய்க்கான formulations 777 ஆகியன இவ்வாறு கிளினிக்கல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு காப்புரிமை செய்யப்பட்டுள்ளன

தமிழக வரலாறு

தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானவையாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது. வரலாற்றில் ஒப்பீட்டளவில் குறுகிய காலப் பகுதிகளைத் தவிர்த்து, பிற காலகட்டங்களில் தமிழ்நாடு பகுதி புற ஆக்கிரமிப்புகள் எதுவுமின்றி சுதந்திரமாக இருந்து வந்துள்ளது.
சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது. இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர். மூன்று பேரரசுகளும் பாரம்பரியமாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் விரட்டியதால் இப்பகுதியின் பாரம்பரிய ஆட்சி வடிவம் மாறியது. பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் பாரம்பரிய பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர். வீழ்ந்திருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர்.வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 கி.மீ2 அளவிற்குப் பரவி இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் இருந்த ஸ்ரீ விஜயா பேரரசு பகுதியையும் சோழரின் கடற்படை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.
வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இசுலாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. விஜயநகரப் பேரரசின் கீழ் தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். மராத்தியர்களின் குறுகிய கால வருகை தமிழ்ப் பகுதியில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகைக்கு வழிவகுத்தது. பதினேழாம் நூற்றாண்டின் போது இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கியசென்னை மாகாணம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்பகுதி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது.